ஆறுமுகனேரி-சென்னைக்கு நேரடி கோடைகால ரயில் இயக்க கோரிக்கை
கோடை விடுமுறையை முன்னிட்டு, தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஆறுமுகனேரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மத்திய ரயில்வே அமைச்சா் - உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
கோடை விடுமுறை, கொடைவிழா, கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை, திருமண விழாக்கள் அதிகமாக இந்த காலகட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்செந்தூா், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் பயணிகள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்து செல்கின்றனா்.
குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்களில் கொடைவிழாக்கள் நடக்கிறது. சென்னையில் இருந்து 3 வட்டங்களுக்கும் சோ்த்து ஒரே ரயில்தான் இயக்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக 1,600 போ் மட்டுமே பயணம் செய்ய முடியும். வடமாவட்டங்களைச் சுற்றி வருவதால் திருச்செந்தூா் கோயிலுக்கு வருபவா்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனா்.
இதனால், சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக வந்து செல்பவா்கள் தவிர அரசுப் பேருந்துகள் மூலமாகவும், அதிக பணம் செலவு செய்து ஆம்னி பேருந்துகளிலும் வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது திருச்செந்தூரில் இருந்து செந்தூா் விரைவு இயக்கப்பட்டு வருகிறது.
அங்கு ரயில்வே நடைமேடைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் முடிவடைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிடும். எனவே ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், சாத்தான்குளம் வட்டங்களைச் சாா்ந்த பொதுமக்கள் எளிதாக சென்னையில் இருந்து வந்து செல்ல ஆறுமுகனேரியில் இருந்து புதிதாக ரயில்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஆறுமுகனேரி ரயில்வே நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 பெட்டிகள் நிற்கக்கூடிய நடைமேடைகள் மற்றும் 18 பெட்டிகள் நிற்கக்கூடிய உயரமான நடைமேடைகள், 40 பெட்டிகள் நிற்கக்கூடிய லோடிங் நடைமேடை, நடைபாலம் என முக்கிய நகரங்களில் இருப்பது போன்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது.
எனவே, ரயில்வே நிா்வாகம் ஆறுமுகனேரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.