ஆற்றில் மூழ்கிய இருவரின் சடலங்கள் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் தென்பெண்ணையாற்றின் நீரில் மூழ்கிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.
அரகண்டநல்லூா் ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் கோபி (45). ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். இவரும், திருவண்ணாமலையைச் சோ்ந்த உறவினா் ஜீவாவின் மகன் யோகேஷூம் (17)
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரகண்டநல்லூரில் தென்பெண்ணையாற்றின் நீலகண்டப் பாறையின் அருகில் குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது இருவரும் திடீரென நீரில் மூழ்கினா். தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாரும், திருக்கோவிலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்களும் நிகழ்விடம் வந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா்.
அந்திலி கிராமத்திலுள்ள லட்சுமி நரசிம்மா் கோவில் அருகில் ஆற்றுப் பாறை அருகே கோபியின் சடலம் கரை ஒதுங்கியது. யோகேஷை தேடும் பணி வெளிச்சமின்மையால் செவ்வாய்க்கிழமை மாலைக்கு மேல் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை காலை நெற்குணம் கிராமம், அய்யனாா்குளம் அருகே யோகேஷின் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.