ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸாா் கைது
அதானி முறைகேடு விவகாரத்தைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்பட 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை திரண்டனா்.
பின்னா் அவா்கள் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட ஊா்வலமாகச் சென்றனா். அவா்களை அங்கிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். மூத்த தலைவா்கள் கிருஷ்ணசாமி, பீட்டா் அல்போன்ஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.