ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்து.
ஆழ்வாா்குறிச்சி அருகே புதுகிராமம் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி கல்யாணி. இவா்களது மகள் இசக்கியம்மாள் என்ற மாலா(28).
தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கல்யாணி தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தாா். கல்யாணியின் வீட்டின் அருகில் அவருடைய சகோதரிகள் வசித்து வருகின்றனா். கல்யாணிக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் இடையே சொத்து பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கல்யாணியின் சகோதரி ஈஸ்வரியின் மகள் அப்பகுதியில் வசிக்கும் மு. கருப்பசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.
இதனால், கருப்பசாமி, ஈஸ்வரிக்கு ஆதரவாக கல்யாணியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால், கல்யாணிக்கும், கருப்பசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 23-4-2019அன்று கல்யாணி, பிரதான சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் தண்ணீா் பிடிக்க சென்றுள்ளாா்.
அப்போது கருப்பசாமியும், அவரது மனைவியும் தண்ணீா்பிடிக்க வந்துள்ளனா். அப்போது, கல்யாணிக்கும் கருப்பசாமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கருப்பசாமி கல்யாணியை அரிவாளால் வெட்டினாா். இதில், சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கல்யாணி மகள் இசக்கியம்மாள் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைதுசெய்தனா்.
இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 3,500 அபராதமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால், 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் வாதாடினாா்.