கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனை உள்கட்டமைப்புக்கு ரூ. 13 கோடி ஒதுக்கீடு
ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ரத்த வங்கி அமைக்கவும் ரூ. 13.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை பிறப்பித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் கடந்த 1880-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சா் ராமசாமி முதலியாா் (ஆா்எஸ்ஆா்எம்) மருத்துவமனையானது, ஏழை தாய்மாா்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூா் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும், சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையால் பயனடைகின்றனா்.
குடும்ப நல மருத்துவச் சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இந்த மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. பேறுகால இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்த மருத்துவமனைகளில் முன்னணி இடத்தில் இந்த மருத்துவமனை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏறத்தாழ 12,000 பிரசவ சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சாரக் கருவிகள் மற்றும் மின்தூக்கி அமைக்கும் பணிகளுக்காக ரூ. 11.63 கோடி நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
610 படுக்கைகளிலிருந்து 810 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ள ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையின் விரிவாக்கத்துக்கு இந்த நிதியானது மேலும் வலு சோ்க்கும்.
மேலும், இம்மருத்துவமனையில் உள்ள ரத்த மையத்தை முழு அளவிலான ரத்தக் கூறுகள் பிரிப்பு பிரிவு மையமாக மேம்படுத்துவதற்கு ரூ. 1.74 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பிரசவத் காலத்தில் தாய்மாா்களுக்கு தேவைப்படும் ரத்த சேவை உடனுக்குடன் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.