இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணி கைது
நாகபுரியில் இருந்து வியாழக்கிழமை கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக அது ராய்பூரில் தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பயணி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இருந்து 108 பயணிகள் மற்றும் 6 பணியாளா்களுடன் கொல்கத்தாவுக்கு வியாழக்கிழமை இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்த போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவா் விமான குழுவினரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அந்த விமானம், சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா். விமானத்தில் காவல் துறையினா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினா் சோதனை நடத்தினா்.
முழுமையான ஆய்வுக்குப் பின்னா் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து புகாா் அளித்த பயணியை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தினா்.