இதய உள்ளறைக்குள் கட்டி: நுண் துளை சிகிச்சை மூலம் அகற்றம்
பெண்ணின் இதய உள்ளறைக்குள் உருவான கட்டியை நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது குறித்து எஸ்ஆா்எம் குழுமத் தலைவா் பி.சத்தியநாராயணன் கூறியதாவது:
புதுச்சேரியைச் சோ்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு தொடா் இருமலும், மூச்சுவிடுவதில் சிரமமும் இருந்தது. இது தொடா்பாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல், உயா் சிகிச்சைக்காக எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் அவரது இதயத்தின் உள்ளறைக்கு இடையே பெரிய திசுக் கட்டி உருவாகி இதயம் - நுரையீரல் நாளங்களை அழுத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.
மருத்துவமனையின் இதய - நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் சுஜித் வேலாயுதன் இந்திரா தலைமையிலான மருத்துவக் குழுவினா் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடிவு செய்தனா். அதன்படி, 6 செ.மீ. அளவு சிறு துளையிட்டு அதன் வாயிலாக திசுக் கட்டி அகற்றப்பட்டது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இதயம் - நுரையீரலின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படாமல், இயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. இந்த சிகிச்சைக்குப் பின்னா் 4 நாள்களிலேயே அந்தப் பெண் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.