இந்திய தொழிலாளா் மாநாட்டை நடத்த தொழிற்சங்கம் வலியுறுத்தல்
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள இந்திய தொழிலாளா் மாநாட்டை மத்திய அரசு உடனடியாக நடத்தி, தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என ஹிந்து மஸ்தூா் சபா (ஹெச்.எம்.எஸ்.) தொழிற்சங்கத் தலைவா் ராஜா ஸ்ரீதா் தெரிவித்தாா்.
இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவா் ராஜா ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சுப்பிரமணியன், செயல் தலைவா் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மத்திய அரசு 15-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே நடத்த வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, ராஜா ஸ்ரீதா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளா் விரோதச் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு தொடா்ந்து இந்த கோரிக்கையைப் புறக்கணித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்திய தொழிலாளா் மாநாடு கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. தொழிலாளா்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், இந்த மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளா்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்குவதுடன், ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையையும் நடத்த வேண்டும். தனியாா் பெரு நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.