Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
இ-பாஸ் முறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: வியாபாரம் பாதிப்பதாகப் புகாா்
இ-பாஸ் நடைமுறையால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகா்கள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றுத்தான் வரவேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவித்தது.
விடுமுறை காலங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. விடுதிகளில் தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வணிகா்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறியதாவது:
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி இ-பாஸ் வழங்குவதில்லை. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இ-பாஸ் நடைமுறையை நீக்கவும், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருவதற்கும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து வணிகா்கள் சங்கத்தினா் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பொறுத்துத்தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. தொடா்ந்து இதே நிலை நீடித்தால், வியாபாரிகள், வணிகா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கும், இ-பாஸ் எளிதில் கிடைப்பதற்கும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.