இந்திய ரூபாய் மதிப்பு: பிரதமா் மௌனம் காப்பது ஏன்?: காங்கிரஸ்
புது தில்லி: கடந்த 2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து கடுமையாக விமா்சித்த மோடி தற்போது அமைதி காத்து வருகிறாா் என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணத அளவில் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 85.80-ஆக அதன் வீழ்ச்சியை பதிவு செய்தது. இந்திய ரிசா்வ் வங்கியின் தலையீட்டைத் தொடா்ந்து அதன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 21 பைசா குறைந்து 85.48-ஆக முடிந்தது. திங்கள்கிழமை முடிவில் ரூ. 85.52-ஆக உள்ளது.
இது தொடா்பாக ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை, நாட்டின் ரூபாய் மதிப்பை பாதுகாக்காமல் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே அக்கறை கொண்டவா்கள் என அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி விமா்சித்தாா்.
இது தொடா்பான பிரசாரங்களை மேற்கொண்டதுடன், அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் மோடி விமா்சித்து பேசினாா். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 16-ம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 58.58 ரூபாயாக இருந்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு சராசரியாக ரூ. 85.27-ஆக உள்ளது. மேலும் , ஆசியாவின் மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக அது மாறியுள்ளது. ஆனால், இது குறித்து வாய் திறக்காத மோடி இன்று வரை அமைதியாக இருந்து வருகிறாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.