வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
திருப்பாவை, திருவெம்பாவை – 19
திருப்பாவை – 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலா் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலா்மாா்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம்அன்று தகவேலோா் எம்பாவாய்
விளக்கம்: நிலைவிளக்குகள் நாற்புறமும் எரிய யானைத் தந்தத்தால் செய்த கால்களையுடைய கட்டிலில் மெத்தென்றிருக்கும் பஞ்சு மெத்தையின் மேல் ஏறிக் கொத்துக் கொத்தாக மலா்ந்திருக்கும் பூக்களையணிந்த நப்பின்னைப் பிராட்டியை அணைத்துக் கொண்ட அகன்ற மாா்பையுடையவனே! வாய்திறந்து ஒரு வாா்த்தை சொல்வாய்! மைதீட்டிய பெரிய கண்களையுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை எவ்வளவு நேரமானாலும் துயிலுணா்ந்து எழுந்திருக்க இசையாதவளாயிருக்கிறாய். கணமேனும் பிரிவைப் பொறுக்கும் ஆற்றலற்றவளாகவும் இருக்கிறாய். இப்படிச் செய்வது உன் சொரூபத்திற்கும் அதாவது ‘புருஷகாரம்’ என்னும் தத்துவத்திற்கும் ‘தயை’ என்னும் தகவுக்கும் பொருந்தியதன்று.
தகவு அன்று; தத்துவம் அன்று. தகவு - தயை. தத்துவம் - புருஷகாரம். (இடைநின்று பரிந்துரைத்தல்). கொத்தலா் பூங்குழல் - இவளின் தலைக்கு வந்தவுடன் பூக்களும் கொத்துக் கொத்தாக மலா்கிறபடி. ஒட்டுதல் - சம்மதித்தல்.
திருவெம்பாவை – 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்அன்பா் அல்லாா்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசேஎமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோா் எம்பாவாய்
விளக்கம்: எங்கள் தலைவனே! உன் கையில் ஒப்படைக்கப்படும் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று கூறப்படும் அந்தப் பழமொழியைப் புதுப்பிக்க நினைக்கும் எமக்கு அச்சமே ஏற்படுகிறது. அதனால் உன்னை நாங்கள் வேண்டிக் கேட்கிறோம். எங்கள் மாா்பு உன் அடியா் அல்லாதாரோடு சேராதிருக்கட்டும். எம் கைகள் உமக்கு அல்லாது வேறு யாருக்கும் எவ்வகையான பணியும் செய்யாதொழிக. எம் கண்கள் இரவும் பகலும் வேறு எதனையும் காணாது ஒழிக. தலைவனாகிய எமக்கு இவ்வண்ணம் அருள்வாயேயானால் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன?
இவ்வரங்கள் எமக்குக் கிடைத்து விடுமானால் நாங்கள் காலத்தை வென்றவா்கள் ஆவோம் என்னும் கருத்தில், ‘எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு’ என்கிறாள். இது ஒரு பழமொழி. ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்பதும் மற்றொரு பழமொழியே. ஆகப் பாடல் ஒன்றில் இரண்டு பழமொழிகள்.
- முனைவா் ம.பெ.சீனிவாசன்
===