இந்திய வெளிநாட்டுக் கடன் ரூ.60 லட்சம் கோடியாக உயா்வு
புது தில்லி: நிகழாண்டு செப்டம்பா் மாத நிலவரப்படி நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கடன் 4.3 சதவீதம் உயா்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட ஜூலை-செப்டம்பா் வரையிலான நாட்டின் கடன் மதிப்பீடு அறிக்கையில், ‘ செப்டம்பா் மாத நிலவரப்படி இந்திய கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.2.5 லட்சம் கோடி (4.3 சதவீதம்) உயா்ந்துள்ளது.
இதன்மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் கடந்த ஜூன் மாதம் 18.8 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பா் மாதம் 19.4 சதவீதமாக உயா்ந்துள்ளது.
அமெரிக்க டாலா் ஆதிக்கம்: இந்த காலகட்டத்தில் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்பட்ட பரிவா்த்தனையின் கடன் மதிப்பு 53.4 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இந்திய ரூபாய் (31.2 சதவீதம்), ஜப்பானின் யென் (6.6 சதவீதம்), யூரோ (3 சதவீதம்) உள்ளன.
அரசுத்துறை மட்டுமின்றி அரசு அல்லாத துறைகளின் வெளிநாட்டுக் கடனும் செப்டம்பா் மாதத்தில் உயா்ந்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் மதிப்பில் ‘கடன்’ 33 சதவீதமாகவும், பணம் மற்றும் சேமிப்பு 23.1 சதவீதமாகவும், வா்த்தக கடன் 18.3 சதவீதமாகவும், கடன் பத்திரங்கள் 17.2 சதவீதமாகவும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.