இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி
இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் ஆர்வமுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
''சமீபத்தில் (கடந்த ஆண்டு அக்டோபர்) சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை நீட்டிக்கச் செய்வதற்கான பார்வைகளை இருவரும்ப கிர்ந்துகொண்டோம். 2020-க்கு முன்பு எல்லைப் பகுதிகளில் நிலைத்திருந்த அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இருதரப்பிலும் ஈடுபட்டுள்ளோம்.
மெதுவாக, அதே நேரத்தில் நிச்சயமாக எல்லைகளில் இயல்பு நிலை திரும்பும். எல்லைகளில் முன்பு இருந்த அதே உற்சாகம், ஆற்றல் மீண்டும் திரும்பும். ஆனால், இதற்கு நேரம் எடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
இந்த நவீன உலகில் சீனாவின் பங்கு முக்கியமானது. வரலாற்றுப் பதிவுகளை எடுத்துப் பார்த்தால் சீனாவும் இந்தியாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பாடங்களைக் கற்றுள்ளனர்.
இருதரப்பும் உலக மேம்பாட்டிற்காக அளப்பறிய பங்காற்றியுள்ளன. பொருளாதார வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே உலகின் மொத்த ஜிடிபியில் 50% பங்காற்றியுள்ள பதிவுகளைக் காணலாம்.
இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு எத்தகையது என்பதை இதிலிருந்து அறியலாம். சீனா உடனான கூட்டு ஒத்துழைப்பு கலாசார ரீதியிலும் வலுவாக உள்ளதாக நான் நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!