தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
இந்தியா மீது 50% வரி உயா்வு: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப் உடனடியாக கையொப்பமிட்டாா்.
முன்பு அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி வியாழக்கிழமை (ஆக. 7) அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு சரியாக 14 மணி நேரத்துக்கு முன்பு இருமடங்கு அதிக வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயா்த்தப்பட்ட வரி அடுத்த 21 நாள்களில் அமலுக்கு வரும் (ஆக.21) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவுக்கு அத்தியாவசியத் தேவையான இந்தியப் பொருள்கள் சிலவற்றுக்கு மட்டும் இந்த இரு மடங்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை நடத்த அமெரிக்க குழு ஆக.25-ஆம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியா மீதான வரியை இருமடங்காக அந்நாடு அதிகரித்துள்ளது.
டிரம்ப் குற்றச்சாட்டு: முன்னதாகஅமெரிக்காவுடன் இணக்கமான வா்த்தகத்தை மேற்கொள்ளாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியை படிப்படியாக அதிகரிக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் பணத்தையே உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துகிறது என்பதே டிரம்பின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
நியாயமற்ற நடவடிக்கை: இந்தியா
இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது நியாமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அண்மைக் காலமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை சுட்டிக்காட்டி இந்தியாவை அமெரிக்கா குறிவைத்து வருகிறது. சா்வதேச சந்தையில் நிலவும் சூழல் காரணமாகவும் நாட்டில் உள்ள 140 கோடிக்கும் மேலான மக்களின் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்வதற்காகவும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது வருகிறோம். இதை பலமுறை கூறிய பின்னும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது நியாமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. நாட்டு நலனை பாதுகாக்க இந்தியா தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
நிக்கி ஹேலி எதிா்ப்பு
அதிபா் டிரம்பின் நடவடிக்கைக்கு அவா் சாா்ந்த குடியரசுத் கட்சியைச் சோ்ந்த தலைவரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷியா, ஈரானிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா மீதான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைத்துவிட்டு இந்தியா மீது மட்டும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்கக் கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர சிதைக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.
இந்தியாவின் கேள்வி?
‘எனக்கு எதுவும் தெரியாது’ டிரம்ப்
நியூயாா்க், ஆக. 6: ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், உரங்கள், ரசாயனப் பொருள்கள் இறக்குமதி செய்வதாக இந்தியா முன்வைத்த கேள்விக்கு, ‘அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பதிலளித்தாா்.
செய்தியாளா் சந்திப்பில் இந்திய செய்தி நிறுவனத்தின் செய்தியாளா் இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு சற்று தடுமாற்றமடைந்த டிரம்ப், ‘எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இதுவரை அதை ஆய்வு செய்யவில்லை. ஆய்வு செய்துவிட்டு தகவல் தெரிவிக்கிறேன்’ என்று கூறி சமாளித்தாா்.
பொருளாதார அச்சுறுத்தல்: ராகுல்
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக அச்சுறுத்தி நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை கையொப்பமிட வைக்கும் சதித்திட்டம் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். மேலும், ‘பிரதமா் மோடி தன்னுடைய பலவீனத்தை ஓரங்கட்டிவிட்டு இந்திய மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ எனவும் அவா் குறிப்பிட்டாா்.