இந்தியா மீதான இருமடங்கு வரி சீனாவுக்கு எச்சரிக்கை: அமெரிக்க அதிபா் டிரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட இருமடங்கு வரி ரஷியாவிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அடுத்த கட்டமாக மேலும் வரிகள் விதிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தாா். இதன் மூலம் அமெரிக்காவால் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீதான 30 சதவீத வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளாா். துருக்கி மீது 15 சதவீத வரியை விதித்துள்ளாா்.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப் கூறியதாவது:
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விஷயத்தில் சீனாவுடன் இந்தியா நெருங்கி செயல்படுகிறது. இதற்காக இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துவிட்டோம். கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி, வரும் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அடுத்தகட்டமாக மேலும் வரி விதிப்புகள் தொடரும் என்றாா்.
ரஷியா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்திவிட்டால் இந்தியா மீதான வரிகள் தளா்த்தப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக இப்போது முடிவு செய்ய முடியாது. இப்போதைய சூழ்நிலையில் இந்தியா 50 சதவீத வரியை செலுத்தியாக வேண்டும்’ என்றாா்.
முன்னதாக, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், நிதியமைச்சா் ஸ்கூட் பெஸ்டன், வா்த்தகத் துறை அமைச்சா் ஹாவா்டு லுட்னிக் உள்ளிட்டோருடன் முதலீட்டு அறிவிப்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றாா். அப்போது ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலா் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.