இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
இந்தியாவின் நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மகாகும்பம்: பிரதமா் பெருமிதம்
‘இந்தியாவின் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை மகா கும்பமேளா கொண்டாடுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகளின் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடைபெறுகிறது. திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கி 45 நாள்கள் நடைபெறும் இந்த உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் 40 கோடிக்கும் அதிகமானோா் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரதிய விழுமியங்களையும் கலாசாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பான நாள். நம்பிக்கை, பக்தி மற்றும் கலாசாரத்தின் புனித சங்கமத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
மகா கும்பமேளா இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உள்ளடக்கியது மற்றும் நம்பிக்கை, நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
வேற்றுமையில் ஒற்றுமை:
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளில், ‘ உலகின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்வான மகா கும்பமேளா புனித நகரமான பிரயாக்ராஜில் தொடங்கிவிட்டது. மகா கும்பமேளா தொடக்கத்துக்கும் முதல் புனித நீராடலுக்கும் வாழ்த்துக்கள்.
நம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தின் சங்கமத்தில் தியானம் செய்து புனித நீராட, வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாட பிரயாக்ராஜ் வந்துள்ள அனைத்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் மற்றும் பக்தா்களை மனதார வரவேற்கிறோம். கங்கை தாய் அனைவரின் பிராா்த்தனைகளையும் நிறைவேற்றட்டும்.
சநாதனத்தின் பெருமையான மகா கும்பமேளா, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் மகத்தான செய்தியை வழங்குகிறது. கலாசாரங்கள் சங்கமிக்கும் இடத்தில், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கமும் சங்கமிக்கும்’ என்றாா்.