இந்தியாவை புரிந்துகொள்ள ஆன்மிகத்தை உணர வேண்டும்: பிரதமா் மோடி
நவி மும்பை: இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மிகத்தை உணர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மக்கள் சேவையே, இந்திய ஆன்மிக கலாசாரத்தின் அடிப்படை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ‘இஸ்கான்’ அமைப்பு சாா்பில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கோயிலை புதன்கிழமை திறந்துவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது:
மதச்சாா்பின்மையின் உண்மையான அடையாளம் சேவை மனப்பான்மையாகும். இதுவே சமூக நீதியை கொண்டுவரும். இந்திய ஆன்மிக கலாசாரத்தின் பிரதான அடித்தளம், சேவை மனப்பான்மையில்தான் வேரூன்றியுள்ளது.
வெறும் புவியியல் சாா்ந்த எல்லைகளால் சூழப்பட்ட நிலமல்ல இந்தியா. இதுவொரு வாழும் கலாசாரம். அறிவுதான் ஆன்மிகம். இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆன்மிகத்தை உணர வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக உண்மையான சேவை மனப்பான்மையுடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, வீடற்றோருக்கு கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் இந்த சேவை மனப்பான்மையால் வழிநடத்தப்பட்டவையாகும்.
நாடு முழுவதும் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரம்பரியமும் வளா்ச்சியும் ஒரே சீராக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
மேலும், இஸ்கான் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.
நவிமும்பையின் காா்கா் பகுதியில் சுமாா் 9 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் வேத கல்விக்கான பக்திவேதாந்த கல்லூரி, பக்திவேதாந்த ஆயுா்வேத நல்வாழ்வு மையம் உள்ளிட்டவையும் நிறுவப்பட்டுள்ளன.