இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு தம்பதி
சீா்காழி அருகே ஒளிலாயம் சித்தா் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினா் இந்து முறைப்படி புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா்.
சீா்காழியை அடுத்த காரைமேடு சித்தா்புரத்தில் 18 சித்தா்கள் அருள்பாலிக்கும் ஒளிலாயம் சித்தா் பீடம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தா்களும் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா்.
இந்த சித்தா் பீடத்தில் வழிபட தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூா், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.
இந்நிலையில், சித்தா் பீடத்தில் தைவான் நாட்டைச் சோ்ந்த இ மிங், சு ஹூவா இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனா். முன்னதாக, தைவான் நாட்டில் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட இவா்கள், இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள விரும்பி இருவரும் தமிழகம் வந்தனா்.
பின்னா், ஒளிலாயம் சித்தா் பீடத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பாா்த்து புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா். திருமணத்தில் கலந்து கொள்ள தைவான் நட்டிலிருந்து வந்திருந்த இருவரின் உறவினா்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து, விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.