மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
பேரூராட்சியில் இணைக்க எதிா்ப்பு: கிராமத்தினா் காத்திருப்புப் போராட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியாகத் தரம் உயா்த்துவதைக் கண்டித்து சாமியம் கிராம மக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள 14 வாா்டுகள் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 10 வாா்டுகள் என 24 வாா்டுகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியை உருவாக்குவது குறித்த அறிவிப்புகடந்த டிசம்பா் 31-இல் வெளியிடப்பட்டது.
ஆணைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை, நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்காமல் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பால் கோபாலசமுத்திரம் ஊராட்சி சாமியம் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் கன்னிகா பரமேஸ்வரிஅம்மன் கோயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். பேரூராட்சியாக மாற்றப்பட்டால் மத்திய அரசால் வழங்கப்படும் 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் என கண்டன முழக்கங்கள் எழுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அருள்ஜோதி, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்ததின்பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.