`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அந்த நாட்டு வானிலை, பருவவியல், புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் வட தபானுலி பகுதிக்கு 17 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது.
அதற்கு முன்னதாக, மலுக்கு மாகாணத்தில் 5.7 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கமும் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தில் 5.2 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கமும் ஏற்பட்டன என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் பல்வேறு கட்டடங்களிலும் சாலைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்ததாக பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது. நிலநடுக்க சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அந்த அமைப்பு கூறியது.
சுமாா் 2.70 கோடி மக்கள்தொகை கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.