இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி
ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.
வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. "பி' மற்றும் "சி' டிவிஷன் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையும் (ஏப். 4), "ஏ' டிவிஷன் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமையும் (ஏப். 8) தொடங்குகின்றன.
முதல் முறையாக இந்தப் போட்டி டிவிஷன் ஃபார்மட்டில் நடத்தப்படுகிறது. அதாவது, போட்டியில் பங்கேற்கும் அணிகள் "ஏ', "பி', "சி' என 3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் "ஏ' டிவிஷன் அணிகளே சாம்பியன் பட்டத்துக்காக மோதும். "பி' டிவிஷன் அணிகள் அடுத்த சீசனில் "ஏ' டிவிஷனுக்கு முன்னேறுவதற்காகவும், "சி' டிவிஷன் அணிகள் அடுத்த சீசனில் "பி' டிவிஷனில் இடம் பிடிப்பதற்காகவும் விளையாடவுள்ளன.
"ஏ' டிவிஷன்: இந்த சீசனில் "ஏ' டிவிஷனில் நடப்பு சாம்பியன் ஒடிஸô, ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, பெங்கால், கர்நாடகம், புதுச்சேரி உள்பட 12 அணிகள் இடம் பிடித்துள்ளன. இவை தலா 3 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு குரூப்பிலுள்ள அணிகளும், இதர அணிகளுடன் தலா ஒரு ஆட்டத்தில் மோதும். குருப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெறும்.
"பி' டிவிஷன்: "பி' டிவிஷனில் இருக்கும் சண்டீகர், கோவா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, மிúஸôரம், தாத்ரா நகர் ஹவேலி, கேரளம், அஸ்ஸôம் ஆகிய 10 அணிகளும் தலா 5 அணிகள் வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும்.
குரூப் சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "ஏ' டிவிஷனுக்கு முன்னேறும். கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "சி' டிவிஷனுக்குதள்ளப்படும்.
"சி' டிவிஷன்: "சி' டிவிஷனில் உள்ள ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர், ஹிமாசல பிரதேசம், பிகார், குஜராத் ஆகிய 8 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்படும். குரூப் சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "பி' டிவிஷனுக்கு முன்னேறும்.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் இந்த புதிய டிவிஷன் முறையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.