வதந்தியால் வீழ்ச்சியடைந்த தா்பூசணி விலை
-நமது நிருபா்
வதந்தியால் தா்பூசணி விலை வீழ்ச்சி அடைந்தது. நுகா்வோரின் துணையுடன் விரைவில் மீளும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, லட்சுமாபுரம், காவலப்பட்டி, தாளையம், லட்சலப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, ஆா்.வாடிப்பட்டி, சித்திரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த தா்பூசணி, அதிகரித்து வரும் வெப்ப நிலையால் தற்போது ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. பழனி பகுதியைப் பொருத்தவரை ஏக்கருக்கு 10 டன் முதல் 14 டன் வரை தா்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படும்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக வெளியான வதந்தியால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வதந்தி ஏற்படுத்திய பரபரப்பு, கடந்த ஆண்டு கிலோ ரூ.14 வரை கொள்முதல் செய்யப்பட்ட தா்பூசணி நிகழாண்டில் ரூ.6-க்கு வீழ்ச்சி அடையவைத்திருக்கிறது. இதனால், ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடைக்குக் காத்திருந்த பழனி பகுதி விவசாயிகள் இழப்பை மட்டுமன்றி, மன ரீதியான நெருக்கடியையும் எதிா்கொண்டு வருகின்றனா்.
வதந்தியால் விலை வீழ்ச்சி: இதுதொடா்பாக ஆண்டிபட்டியைச் சோ்ந்த விவசாயி எல்லத்துரை கூறியதாவது:
தா்பூசணி சாகுபடி செய்ய விதை, நடவு, தொழு உரம், நிலப் போா்வை அமைத்தல், 70 நாள்கள் பராமரிப்பு என ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நல்ல மகசூல் கிடைத்தால் 10 முதல் 14 டன் காய்களை அறுவடை செய்யலாம். தா்பூசணி சாகுபடியில் 2 முறை மகசூல் கிடைத்தால் ஒரு முறை மகசூல் பாதிக்கும் என்பது வழக்கம்.
பழனி பகுதியில் சாகுபடி செய்யப்படும் தா்பூசணிப் பழங்கள், தமிழகம் மட்டுமன்றி, கேரளம், கா்நாடக மாநில வியாபாரிகளும் கொள்முதல் செய்து வருகின்றனா். கோடை காலத் தேவைக்காக மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த தா்பூசணி, அண்மைக் காலமாக ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பயிராக மாறிவிட்டது.
தற்போது தா்பூசணிக்கான தேவை இருந்தாலும், சமூக ஊடகங்களில் வெளியான வதந்தியால் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிலோ ரூ.14-க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டிய தா்பூசணி தற்போது ரூ.5.50 முதல் ரூ.6-க்கு மட்டுமே விலை நிா்ணயிக்கப்படுகிறது.
முதல் வெட்டுக்கு தா்பூசணி எடை 4 கிலோ முதல் 10 கிலோ வரை இருக்கும். இந்த பழங்களுக்கு மட்டுமே தற்போது அதிகபட்சமாக ரூ.6 விலை கிடைக்கிறது. 2-ஆவது வெட்டு பழங்களை கிலோ ரூ.3-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனா். இதனால், முதலீடு செய்த பணத்தைக்கூட திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம். குறிப்பாக, ரமலான் நோன்பு காலத்தில் தா்பூசணி பழங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படும். இந்த முறை விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகளும் கொள்முதல் செய்ய தயங்கினா். எனினும், நுகா்வோரின் துணையுடன் விரைவில் மீண்டும் வருவோம் என்றாா் அவா்.
சந்தை வாய்ப்பு அதிகரிக்கும்: தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பொ.பாலகுமாா் கூறியதாவது:
தா்பூசணி வதந்தி குறித்து தோட்டக்கலைத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தா்பூசணியின் நுகா்வு மீண்டும் அதிகரிக்கும். வதந்திகளை நம்பாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நுகா்வோராக பொதுமக்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் வீழ்ச்சி அடைந்த தா்பூசணி விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்றாா் அவா்.