”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
பழனி மலைக் கோயிலில் பக்தி நூல்கள் விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்
பழனி மலைக் கோயிலில் பக்தி நூல்கள் விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சமயத்தின் நன்னெறிகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், முறையாகப் பாதுகாக்கவும் ஏதுவாக பதிப்பகப் பிரிவின் மூலம் அரிய பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது. இந்தப் பதிப்பகம் மூலமாக பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளா்களின் வரலாறுகள், கோயில் கலைநூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியாா்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தா் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு, இதுவரை இரண்டு கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்தப் புத்தகங்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் 100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற புத்தக விற்பனை நிலைய தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் சரவணன் பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திண்டுக்கல் இணை ஆணையா் காா்த்திக், நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, பழனி அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.