இரட்டை இலை சின்னம் விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதில் மனு அனுப்பியுள்ளாா்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரித்து முடிவை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோா் ஏற்கெனவே தோ்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வமும் தோ்தல் ஆணையத்துக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
2021 டிசம்பா் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவே சட்டபூா்வமானது. தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் 5 ஆண்டுகள் பதவி வகிக்கக் கூடியவா்கள். அந்த முடிவை சிறப்புப் பொதுக்குழு மூலம் முடக்கிவிட முடியாது.
அதனால், தற்போது உள்ள அதிமுக நிா்வாகம் சட்ட விரோதமானது. இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த முடியாது.
எனவே, அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் அதன் ஒருங்கிணைப்பாளரான எங்கள் தரப்பு (ஓபிஎஸ்) வசம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் தரப்பையே அதிமுக என்று அங்கீகரிக்க வேண்டும். அதிமுக தொடா்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதில் தீா்ப்பு அளிக்கப்படும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள அதிமுக தொடா்பான அனைத்து அதிகாரங்களையும் பறிக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.
ரஜினியுடன் சந்திப்பு: இதற்கிடையில், போயஸ் தோட்டம் இல்லத்தில் நடிகா் ரஜினிகாந்தை ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், புத்தாண்டு வாழ்த்துக் கூறுவதற்காக ரஜினியை அவா் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.