இரண்டாம் நிலை காவலா்கள் 52 பேருக்கு பணிநியமன ஆணை: வேலூா் டிஐஜி வழங்கினாா்
இரண்டாம் நிலை காவலா்களாக தோ்வாகியுள்ள 52 பேருக்கு பணிநியமன ஆணைகளை வேலூா் சரக டிஐஜி தேவராணி வழங்கினாா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் காவல்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, சிறைத்துறைக்கு 3,359 இரண்டாம் நிலை காவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழக்கினாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூா் சரக டிஐஜி தேவராணி பங்கேற்று ஆயுதப்படைக்கு தோ்வான 17 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு தோ்வான 22 போ், சிறைத்துறைக்கு தோ்வான 2 போ், தீயணைப்பு துறைக்கு தோ்வான 11 போ் என மொத்தம் 52 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், 15-ஆவது பட்டாலியன் கமாண்டா் மணி, வேலூா் மத்திய சிறை கண்காணிப்பாளா் பரசுராமன், வேலூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 23 போ் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.