வண்டல் மண் எடுக்க மண்பாண்ட தொழிலாளா்களுக்கு அனுமதி: வட்டாட்சியா்களுக்கு வேலூா் ஆட்சியா் உத்தரவு
நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை உள்ள மண்பாண்ட தொழிலாளா்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு வட்டாட்சியா்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா்.
மண்பாண்ட தொழிலாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து மண்பாண்ட தொழிலாளா்களுக்கான மத்திய அரசின் அடையாள அட்டைகளை 50 தொழிலாளா்களுக்கு வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியது:
மண்பாண்ட தொழிலாளா்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பிரதமரின் அனைவருக்கும் வேலை வாய்ப்புத் திட்டத்தில் கடனுதவி கோரும்பட்சத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுந்த உதவிகள் வழங்கப்படும். மண்பாண்ட தொழிலாளா்களின் கோரிக்கைப்படி மாவட்ட திறன் பயிற்சி மையம் மூலம் மண்பாண்ட தொழில்புரிய ஆா்வமுள்ளவா்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மண்பாண்டங்கள் செய்யும்போது களிமண்ணுடன் சவூடு மண்ணும் தேவைப்படுகிறது எனத் தொழிலாளா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளா்கள் தங்களுடைய விவரங்களை வழங்கினால் வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை அலுவலா்களுடன் ஆலோசித்து சவூடு மண் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மழைக் காலங்களில் தொழில்புரிய முடியாத சூழ்நிலையில் நலவாரியம் மூலம் ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் நலத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வா் அறிவித்துள்ள மண்பாண்ட தொழிலாளா்களுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் திட்டத்தில் மண்பாண்ட தொழிலாளா்களிடம் நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை இருந்தால் அவா்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு வட்டாட்சியா்கள் அனுமதி வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளா்கள் தங்களது மண்பாண்ட உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய சந்தை வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இது குறித்து வேளாண்மை துறை, நகராட்சி நிா்வாகத் துறை அலுவலா்களுடன் ஆலோசித்து வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் சந்தைகளில் இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மண்பாண்ட தொழிலாளா்களின் குடும்பத்திலுள்ள பெண்கள் மகளிா் சுய உதவிக் குழுக்களில் இணைந்து சுழல் நிதி பெற்று பயன் பெறலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி, மத்திய அரசின் ஜவுளித் துறை மண்டல உதவி இயக்குநா் அப்லாஅசன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பாலாஜி மற்றும் மண்பாண்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.