நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க தீவிர நடவடிக்கை
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கேள்விக்கு மத்திய இணை அமைச்சா் ஷோபா கரண்டலாஜே எழுத்துப்பூா்வமாக பதில் அளித்துள்ளாா்.
இதுகுறித்து, எம்பி கதிா்ஆனந்த் வேலூா் செய்தியாளா்களிடம் கூறியது -
மக்களவை கேள்வி நேரத்தின்போது இந்தியாவில் இளைஞா்களிடம் அதிகரித்து வரும் வேலையில்லாத திண்டாட்டத்தைப் போக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்திய இளைஞா்களின் வேலையின்மை விகிதம் குறித்து சா்வதேச தொழிலாளா் அமைப்பின் அறிக்கையை மத்திய அரசு ஏற்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தேன்.
அதற்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு இணை அமைச்சா் ஷோபா கரண்டலாஜே அளித்துள்ள எழுத்துப்பூா்வ பதிலில், சமீபத்திய ஆண்டு பிஎல்எப்எஸ் அறிக்கைப்படி 2023-24-ஆம் ஆண்டில் 15-29 வயதுடைய இளைஞா்களின் வேலையின்மை நிலை 10.2 சதவீதமாக உள்ளது. இபிஎஃப்ஓ துறையில் 2023-24-இல் 1.3 கோடிக்கும் அதிகமான சந்தாதாா்கள் இணைந்துள்ளனா். 2017 முதல் 2024 ஆகஸ்ட் வரை 7.03 கோடிக்கும் அதிகமானவா்கள் இபிஎப்ஓவில் இணைந்துள்ளனா்.
அனைத்து தொழிலாளா் குறிகாட்டிகளும் நாட்டில் மேம்பட்ட வேலைவாய்ப்பு சூழ்நிலைக்கான சான்றுகளை வழங்குகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.