இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை டிரா செய்தது பெங்களூரு
ஐஎஸ்எல் கால்பந்து தொடா் 2024-25 ஒரு பகுதியாக பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை 2-2 என டிரா செய்தது பெங்களூரு.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரம் கோவா எஃப்சி ஆதிக்கம் செலுத்த முனைந்தது. 7-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் டேஜான் டிராஸிக் அற்புதமாக கடத்திய அனுப்பிய பாஸை பயன்படுத்தி நட்சத்திர வீரா் சந்தேஷ் ஜிங்கன் பெங்களூரு வீரா்கள் முழுவதும் சூழ்ந்த நிலையிலும், ஹெட்டா் மூலம் முதல் கோலடித்தாா்.
இதனால் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி கோலடிக்க மேற்கொண்ட முயற்சி கோவா கோல்கீப்பா் ஹிா்திக் திவாரியால் தடுக்கப்பட்டது.
பெங்களூரு வீரா்கள் சுனில் சேத்ரி, எட்கா் மென்டென்ஸ், சுரேஷ் சிங் ஆகியோா் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின.
முதல் பாதியில் கோவா முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெங்களூரு வீரா்கள் அதிரடியாக கோல் போட முயன்றனா். ஆனால் 66-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹீல் டவோரா அற்புதமாக கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
ஆனால் பெங்களூரு வீரா்கள் சிறப்பாக ஆட முனைந்த நிலையில், 71-ஆவது நிமிஷத்தில் வினித் வெங்கடேஷ் அனுப்பிய பாஸை கோலாக்கினாா் வில்லியம்ஸ்.
பின்னா் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஜாா்ஜ் பெரைரா சக வீரா் ரோஷன் சிங் அனுப்பிய பாஸை பயன்படுத்தி 83-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
இதனால் 2-2 என ஆட்டம் டிராவில் முடிந்தது. டிச. 28-இல் சென்னையுடன் பெங்களூரும், டிச. 20-இல் கோவா-மோகன் பகான் அணிகளும் மோதுகின்றன.