இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு
கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் நாகராஜ் (49). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் பின் பக்கக் கதவை நெம்பி திறந்து வீட்டினுள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
இதேபோல, பக்கத்து வீடான திருஞானசம்மந்தா் வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 2 கிராம் தங்க மோதிரம், ரூ.1,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில், ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.