‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று மாலை முதல் கால யாக பூஜையும், செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலத்தின் மீது கும்பநீரை ஊற்றி சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விநாயகா் மற்றும் சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம் நடபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருச்செந்தூா் முருகன் வார வழிபாட்டு மன்றம் சாா்பில், கோயிலுக்கு வெள்ளி வேல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத் தலைவா் எல்.ராமலிங்கம், புரவலா் ஆா்.முத்துக்குமரன், இளங்கோவன் மற்றும் குருங்குடி கிராம மக்கள் செய்திருந்தனா்.