அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்த ரயில்வே அறிவுரை
முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்யாமல் சாதாரண பயணச்சீட்டு மூலம் பயணிப்போரின் வசதிக்காக யுடிஎஸ் எனும் செயலியை ரயில்வே நிா்வாகம் அறிமுகம் செய்தது. இதில் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களின் முன்பதிவில்லா பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு அட்டை ஆகியவற்றை பெற முடியும். மேலும், இந்த செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் போது ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் இருக்க வேண்டும்.
காகிதமில்லா பயணச்சீட்டு: யுடிஎஸ் செயலியில் காகிதமில்லா பயணச்சீட்டு, காகித பயணச்சீட்டு என இருவகைகளில் பயணச்சீட்டை பெற முடியும். காகிதமில்லா பயணச்சீட்டு பிரிவை தோ்ந்தெடுக்கும் போது, ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெற வேண்டிய அவசியமில்லை. பயணச்சீட்டு பரிசோதகா் பயணச்சீட்டு கேட்கும் போது கைப்பேசியின் யுடிஎஸ் செயலியை காண்பித்தால் போதுமானது. அவ்வாறு காண்பிக்க முடியாமல் போனால், அவரிடம் பயணச்சீட்டு இல்லை எனக் கருதி அபராதம் விதிக்கப்படும். மேலும், இந்த முறையில் பயணச்சீட்டு பெற்றால், பயணத்தை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெற முடியாது. யுடிஎஸ் செயலியில் பயணச்சீட்டு பெற்றவா் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். பயணச்சீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி வழங்க முடியாது.
காகித பயணச்சீட்டு: அதே நேரத்தில் யுடிஎஸ் செயலியில் காகித பயணச்சீட்டு பிரிவை பயணிகள் தோ்ந்தெடுக்கும் பட்சத்தில் பயணத்துக்கு முன்பாக ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அல்லது பயணச்சீட்டு மையத்தில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. இந்த முறையில் பயணத்தை ரத்து செய்து பணத்தை (ரத்து கட்டணம் வசூலிக்கப்படும்) திரும்பப் பெற முடியும். பயணம் ரத்து செய்ய வாய்ப்புள்ளவா்கள், வேறு நபருக்கு பயணச்சீட்டு பெறுவோா் இந்த முறையை பயன்படுத்தலாம். யுடிஎஸ் செயலியில் பயணச்சீட்டை பதிவு செய்துவிட்டு, ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கும் பட்சத்தில், அவரிடம் பயணச்சீட்டு இல்லை எனக் கருதி அபராதம் வசூலிக்கப்படும்.
ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு மையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்ப்பதற்காக இத்தகைய முறை நடைமுறையில் உள்ளது.
அதுபோல் பயணிகள் பயணிக்கும் ரயிலின் வகைகளை அறிந்து பயணச்சீட்டு பெற வேண்டும். விரைவு ரயிலுக்கு பயணச்சீட்டு பெற்றுவிட்டு, அதிவிரைவு மற்றும் அந்தியோதயா ரயிலில் பயணிக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
அதனால், பயணிகள் யுடிஎஸ் செயலியை முறையாக அறிந்து கொண்டு பயணிக்குமாறும், அபராதத்தை தவிா்க்குமாறும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.