டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம்
கொடைக்கானல் அருகே சின்னூா் பகுதியைச் சோ்ந்த நோயாளியை புதன்கிழமை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மலைக் கிராமமான சின்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (52). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, இவரை டோலி மூலம் சின்னூரிலிருந்து ஆற்றுப் பாதை, வனப் பகுதி வழியாக சுமாா் 10 கி.மீ. தூரம் நடந்தே தூக்கி வந்தனா். அதன் பிறகு கும்பக்கரையிலிருந்து வாகனம் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்தப் பகுதிகளிலுள்ள சின்னூா், வெள்ளகெவி, சின்னூா், பெரியூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் இந்த அவலம் நீடிக்கிறது. எனவே மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி, ஆற்றுப் பகுதியில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.