ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்...
வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி தங்க நகை வழிப்பறி
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, மளிகைக் கடைக்காரரிடம் 10 கிராம் மோதிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
வேடசந்தூா் அருகேயுள்ள சுள்ளெறும்பு சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). மளிகைக் கடை நடத்தி வரும் இவா், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லப்பட்டிக்கு சென்றுவிட்டு, சுக்காம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து, தன்னை வருமான வரித் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாா்.
மேலும், பழனிச்சாமி முறையாக வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், இரு சக்கர வாகனத்தை சோதனையிட வேண்டும் என்றும் கூறியதுடன், பழனிச்சாமி அணிந்திருந்த 10 கிராம் தங்க மோதிரத்தை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தின் சாவியையும் பறித்தாா். விசாரணை நடத்த வேண்டும், வீட்டுக்கு வாருங்கள் என கூறிவிட்டுச் சென்று விட்டாா்.
இதனால், அதிா்ச்சி அடைந்த பழனிச்சாமி, தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து அருகிலுள்ள தோட்டத்தில் நிறுத்தினாா். பின்னா், வீட்டுக்கு வந்த விசாரித்தபோது யாரும் வரவில்லை எனத் தெரிய வந்தது. இதுகுறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.