பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது
வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், வேடசந்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கோமதி (40). இவா், வேடசந்தூா் சாலைத் தெருவிலுள்ள அஞ்சல் நிலையத்துக்கு கடந்த 23-ஆம் தேதி நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த 2 மா்ம நபா்கள், கோமதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு வேடசந்தூா்- கோவிலூா் சாலையில் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில், வேடசந்தூா் போலீஸாா் விசாரித்தனா். இதில் வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (35), கோவையைச் சோ்ந்த அபினேஷ்குமாா் (35) ஆகியோா், கோமதியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் காா்த்திக்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் அனுமதி இல்லாத நாட்டு கைத் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாகவும் போலீஸாா் விசாரித்தனா். அத்துடன் 5 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்த போலீஸாா், தப்பிச் சென்ற அபினேஷ்குமாரை தேடி வருகின்றனா்.