உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவரின் உறவினரான ரத்தினகுமார் (25) என்பவர் விடுதிக்கு வந்திருந்தார். இருவரும் விடுதியின் முன்பு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினகுமார், கல்லூரி மாணவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதனால் மாணவி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறி துடித்தார். அதைப்பார்த்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதனால் ரத்தினகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் தீயை அனைத்த அப்பகுதி மக்கள், மாணவியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாழம்பூர் போலீஸார் வழக்கு பதிந்து ரத்தினகுமாரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ரத்தினகுமாரை மாணவி காதலிக்க மறுத்ததால் இந்த விபரீத செயலில் ரத்தினகுமார் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் கூறுகையில், ``மாணவி பி.டெக் படித்து வருகிறார். இவரும் ரத்தினகுமாரும் உறவினர்கள். அதனால் ரத்தினகுமாருடன் மாணவி பழகி வந்திருக்கிறார். ரத்தினகுமார் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதனால் மாணவியை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.

சம்பவத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது மாணவியிடம் ரத்தினகுமார் தன்னுடைய காதலை கூறிய சமயத்தில் அதை மாணவி ஏற்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார், `எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று கூறியப்படி மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் ரத்தினகுமாரைக் கைது செய்திருக்கிறோம். மாணவியும் ரத்தினகுமாரும் உறவினர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.