'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகை: பேரூராட்சி கடைகள் ஏலம் ரத்து
திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன்கோட்டையில் முன் அறிவிப்பு இல்லாமல் வணிக வளாகக் கடைகளுக்கு ஏலம் நடைபெறுவதாகக் கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து,கடைகள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட வணிக வளாகக் கடைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட சிலா் மட்டுமே கடைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சித்தையன்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 2 கடைகள், ஆடு அடிக்கும் தொட்டி வாடகைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை காலை 11 மணிக்கு ஏலம் நடத்துவதற்கு பேரூராட்சி நிா்வாகம் தயாராக இருந்தது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரத் தலைவா் அப்துல் ரகுமான், நகரச் செயலா் அஸ்மல் கான், ஆத்தூா் தொகுதி துணைத் தலைவா் முகமது ராஜா, நிா்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, முன்னறிவிப்பு இல்லாமல் ஏலம் நடத்தக் கூடாது. முறையாக முன் அறிவிப்பு செய்யப்பட்டு திறந்த வெளியில், ஏலம் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட சிலா் மட்டுமே கடைகளை நடத்தி வருவதால் அனைத்துக் கடைகளையும், பொது ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும். பழுதடைந்த வணிக வளாகங்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். அப்போது, இவா்களுக்கும் பேரூராட்சி அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 2 வணிக வளாகக் கடைகள், ஆடு அடிக்கும் தொட்டிக்கு நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு கூறுகையில், முறையாக அறிவிப்பு செய்துதான் ஏலம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் இந்தத் தகவல் தெரியவில்லை என கூறுகின்றனா். இன்று நடைபெற இருந்த ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது. விரைவில் மீண்டும் ஏலம் நடத்தப்படும் என்றாா்.