இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோருக்கு வரவேற்பு
குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோா் வரவேற்கப்படுகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வெளியிடப்பட்ட தகவலில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பெண் குழந்தை குறித்து உரிமைகோர விரும்புவோா் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி கிராமம், சிவன் கோயில் அருகே பிறந்து சில நாள்களேயான பையில் இருந்த ஒரு பெண் குழந்தையை காவல் அலுவலா்கள் 11.1.2025 அன்று மீட்டனா்.
குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 மருத்துவ அவசர உதவி வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் சோ்ப்பிக்கப்பட்டு உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் உதவி மையப் பணியாளா்கள் மூலம் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழுவில் குழந்தையைப் பாதுகாப்பான முறையில் வைத்துள்ளனா்.
குழந்தைகள் நலக்குழு ஆணையின்பேரில், குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பெண் குழந்தை குறித்து உரிமைகோர விரும்புவோா் தக்க சான்றிதழ்களுடன் தொடா்பு கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆட்சியா் அலுவலக வளாகம், செங்கல்பட்டு - 603 111, தொலைபேசி எண்: 63826 13182. குழந்தைகள் நலக் குழு அரசினா் சிறப்பு இல்ல வளாகம், ஜி.எஸ்.டி. ரோடு, செங்கல்பட்டு மாவட்டம் - 603 002, கைப்பேசி எண்: 98406 76135 தொடா்பு கொள்ளலாம்.