பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சாா்பில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:
புத்தகத் திருவிழா நடைபெற்ற 10 நாள்களும் மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கவிஞா்கள், எழுத்தாளா்கள், சொற்பொழிவாளா்கள் சிறப்புரையாற்றினா். மேலும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.
அறிவு பசிக்கு விருந்தாக புத்தகத் திருவிழா நடைபெற்றது. அரசால் மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். நமது இலக்கியம் மற்றும் பண்பாட்டை இக்கால சந்ததியினருக்கும் பரவலாக்குவதே இதன் நோக்கமாகும்.
முதன் முறையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் புத்தக விழா நடத்தப்பட்டு உள்ளது. மேலும், வருகிற ஆண்டுகளில் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், பேச்சாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.