திருப்பத்தூா் புத்தகத் திருவிழா: ரூ.22 லட்சத்துக்கு விற்பனை
திருப்பத்தூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் தெரிவித்துள்ளாா்.
அவா் கூறியதாவது:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் உள்ளிட்டவை சாா்பில் 4-ஆம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில், கதை, கவிதை, நாடகம், போட்டித்தோ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சிக்கு மாணவ-மாணவிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினா் தினமும் வந்து புத்தகங்கள் வாங்கி சென்றனா். இதில் 62,754 போ் கலந்து கொண்டனா். மேலும் அவா்கள் 15,776 புத்தகங்களை ரூ.22 லட்சத்துக்கு வாங்கிச் சென்றுள்ளனா்.