இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சபீா் அலி, பேச்சாளா் கோவை ரஹீம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இதில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் ஆற்றலைக் குறைக்கும் வகையிலும், துணைவேந்தா்களின் நியமனங்களில் உள்ள வெளிப்படைத் தன்மையை சிதைக்கும் வகையிலும் அமைந்துள்ளன. கல்வியை ஒத்திசைவு பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியா்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்.
வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் யாசா், மாவட்டபொருளாளா் சிராஜுதீன், துணைத் தலைவா் ஜாகீா் அப்பாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.