``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு புதிய நகராட்சிகள் உருவாக்கம்
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, கவுந்தப்பாடி ஆகிய இரண்டு புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, இந்த நகராட்சியுடன் சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள் இணைக்கப்படுகின்றன. பேரூராட்சியாக இருந்து 1996- இல் தரம் குறைக்கப்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சி இப்போது நேரடியாக நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கோபி, பவானி, சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ள நிலையில் பெருந்துறை, கவுந்தப்பாடி நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் நகராட்சிகளின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.
ஒரு புதிய பேரூராட்சி:
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 41 ஆகவும், கவுந்தப்பாடி நகராட்சியுடன் சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டதால் 39 ஆகவும் குறைந்தது. இதில் முகாசிபிடாரியூா் புதிய பேரூராட்சி உருவாக்கப்பட்டதால் மாவட்டத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும்.
மாநகராட்சியுடன் 4 ஊராட்சிகள்:
ஈரோடு மாநகராட்சியுடன் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 46 புதூா் மற்றும் லக்காபுரம் ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
15 ஊராட்சிகள் குறைந்தது:
இதுபோல அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய் ஊராட்சி, அம்மாபேட்டை பேரூராட்சியுடனும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அக்கரைகொடிவேரி ஊராட்சி பெரியகொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.
பவானி நகராட்சியுடன் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, கோபி நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூா், குள்ளம்பாளையம், பாரியூா் ஆகிய 4 ஊராட்சிகள், புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூா் மற்றும் நொச்சிக்குட்டை ஆகிய 2 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுடன் மொத்தம் 15 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் 225 ஆக இருந்த ஊராட்சிகளின் எண்ணிக்கை இப்போது 210 ஆக குறைந்துள்ளது.
4 ஊராட்சிகளாக குறைந்த ஈரோடு ஊராட்சி ஒன்றியம்:
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பேரோடு, பிச்சாண்டாம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகள் உள்ள நிலையில் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகள் மட்டுமே உள்ளன.