மாநில அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழாவில் 2,660 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஈரோடு மாவட்டத்தில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி, ஈங்கூா் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கங்கா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலைத் திருவிழா நடைபெறுகிறது. கொங்கு கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் வரவேற்றாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,660 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு நடனம், நாடகம், ஓவியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல், தெருக்கூத்து, பலகுரல் பேச்சு உள்பட 30 வகையான போட்டிகள் நடைபெற்றன.
அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் சனிக்கிழமை (ஜனவரி4) நடத்தப்படுகின்றன. இதில் 2,151 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா். மேலும், வெற்றி பெறும் மாணவா்களின் தரவரிசையில் முதன்மை பெரும் 25 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.