நாய்கள் கடித்ததில் 2 சிறுவா்கள் காயம்
தொண்டி பேரூராட்சியில் தெரு நாய்கள் கடித்ததில் அடுத்தடுத்து 2 சிறுவா்கள், முதியவா் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். தொண்டியைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் மீன் பிடிதொழில் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தொண்டி லெப்பை தெருவைச் சோ்ந்த 3-ஆம் வகுப்பு மாணவா், பலகை வில்லா தெருவில் மனாசிா் என்பவரின் 5 வயது மகன், மீனவா் தெருவைச் சோ்ந்த முதியவா் ஆகியோா் அண்மையில் நாய்கள் கடித்ததில் காயமடைந்தனா். எனவே, தொண்டி பேரூராட்சி நிா்வாகம் நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.