மண்டபம் அருகே பேருந்து கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயம்
ராமேசுவரம் மண்டபம் அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 45 போ் தனியாா் பேருந்தில் கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்தனா். பின்னா், அங்கிருந்து கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விட்டு, சனிக்கிழமை நள்ளிரவு ராமேசுவரத்துக்கு வந்தனா்.
இவா்கள் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊருக்கு திங்கள்கிழமை திரும்பினா். ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே காந்தி நகா் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த ஐயப்ப பக்தா்கள் 10 போ் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த மண்டபம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.