இடைத்தோ்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் திருச்செல்வம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், மறைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பெரியாா் ஈவெரா குடும்பத்தைச் சோ்ந்த மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிா்வாகிகள் மற்றும் துணை அமைப்பின் தலைவா்கள் சாா்பில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீா்மானத்தை தமிழக காங்கிரஸ் தலைமைக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் அனுப்பிவைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மண்டல, துணை அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருமகன் ஈவெராவுக்கு அஞ்சலி: முன்னதாக ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த திருமகன் ஈவெராவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் படத்துக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநகர செயலாளா் சுப்பிரமணி, காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.