ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
புது தில்லி: ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா திங்கள்கிழமை கண்டனம்தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் தெஹ்ரிக்- ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பதுங்குமிடங்கள் மீது பாகிஸ்தான் கடந்த மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 27 பெண்கள், குழந்தைகள் உள்பட 47 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் குவிந்து அந்நாட்டு ராணுவத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
பழிபோடுவது பாகிஸ்தான் பழக்கம்: இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்பட குடிமக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலா் உயிரிழந்ததாக ஊடக செய்திகள் வாயிலாக தெரிந்துகொண்டோம். அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கண்டனத்துக்குரியது.
தங்கள் உள்நாட்டு நிா்வாக தோல்விகளை மறைக்க அண்டை நாடுகள் மீது குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானின் பாரம்பரிய பழக்கம். இந்த விவகாரம் தொடா்பாக ஆப்கானிஸ்தான் நிா்வாகத்தின் செய்தித்தொடா்பாளா் அளித்த விளக்கமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது’ என்றாா்.