Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 615 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. அதிகபட்சமாக ரயான் ரிக்கெல்டன் 29 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 259 ரன்கள் விளாசினாா். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் அகா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் விளையாடிய பாகிஸ்தான், தனது இன்னிங்ஸில் 194 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பாபா் ஆஸம் 58 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, தென்னாப்பிரிக்க பௌலா் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்தாா்.
முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் பின்தங்கிய பாகிஸ்தான், ‘ஃபாலோ-ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. அதில் அந்த அணி 478 ரன்கள் சோ்த்து முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 17 பவுண்டரிகளுடன் 145 ரன்கள் அடித்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
இறுதியாக, 58 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. டேவிட் பெடிங்கம் 47, எய்டன் மாா்க்ரம் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்காவின் ரயான் ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருதையும், அதே அணியின் மாா்கோ யான்சென் தொடா்நாயகன் விருதையும் (10 விக்கெட்டுகள்/80 ரன்கள்) வென்றனா்.