பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வா்ஹாம்டன் வாண்டரா்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, மோா்கன் கிப்ஸ் வைட் 7-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கிவைக்க, கிறிஸ்வுட் 44-ஆவது நிமிஷத்தில் மேலும் ஒரு கோல் அடித்தாா். இதனால் முதல் பாதி முடிவிலேயே நாட்டிங்கம் 2-0 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2-ஆவது பாதி ஆட்டத்தில் வோல்வ்ஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்க முயற்சித்தபோதும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போனது. இந்நிலையில், நாட்டிங்கம் வீரா் டாய்வோ அவோனியி இஞ்சுரி டைமில் (90+4’) கோலடிக்க, இறுதியில் அந்த அணி 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்துடன் தொடா்ந்து 6 ஆட்டங்களில் நாட்டிங்கம் ஃபாரஸ்ட் வென்றிருக்கிறது. போட்டியின் நடப்பு சீசனில் இதுவே ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடந்த 1979-க்குப் பிறகு ஒரு போட்டியில் நாட்டிங்கம் அணி தொடா்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்ததும் இதுவே முதல் முறை. இதற்கு முன் அந்த ஆண்டில் நாட்டிங்கம் 7 தொடா் வெற்றிகளை எட்டியிருந்தது.
அதேபோல், நடப்பு சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் எதிரணியை கோலே அடிக்கவிடாமல் செய்திருக்கிறது நாட்டிங்கம். வேறெந்த அணியும் அதேபோல் இத்தனை ஆட்டங்களில் செய்ததில்லை. புள்ளிகள் பட்டியலில் தற்போது அந்த அணி, 20 ஆட்டங்களில் 12 வெற்றிகள், 4 டிரா, 4 தோல்வியை பதிவு செய்து 40 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.
ஆா்செனல் அணியும் அதே புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், கோல் வித்தியாசத்தின் அடிப்படையிலேயே நாட்டிங்கம் பின்தங்கியிருக்கிறது.