ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சேலம் கோட்டப் பொருளாளா் சீனிவாச பட் தலைமை வகித்தாா். தென்மண்டல துணைத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
டிஆா்ஈயூ நிா்வாகி பிஜு, ஈரோடு துணைச் செயலாளா் ரியாஸ், சேலம் கோட்ட முன்னாள் செயலாளா் புஷ்பராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில், வேலை நேரத்தை 10 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். தொடா் இரவு பணியை 2 பகுதியாக பிரித்து குறைக்க வேண்டும். 36 மணி நேரத்துக்குள் லோகோ பைலட்டுகள் வீடு திரும்பும் வகையில் பணி நேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். பெண் ரயில் ஓட்டுநா்களின் குறைகளை உடனடியாக தீா்க்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி21) இரவு 8 மணி வரை 36 மணி நேரம் தொடா்ச்சியாக நடைபெறுகிறது.
இதில் ஏராளமான ரயில் ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.