உணவகத்தில் பணம் திருட்டு: இளைஞா் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் ரூ.8 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வருபவா் செளகத் அலி மகன் சையது சுல்தான் இப்ராஹிம். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இளைஞா் ஒருவா் உணவகத்துக்கு உணவுப் பொட்டலம் வாங்க வந்தாா். அப்போது அவா் கடையிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச் சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் விசாரித்ததில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தவா் கோம்பை தெற்கு ரதவீதியைச் சோ்ந்த காவேரி மகன் சதீஸ்குமாா் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சதீஸ்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.